காட்டு யானை தாக்கி போலீஸ்காரர் சாவு


காட்டு யானை தாக்கி போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 15 March 2023 5:15 AM GMT (Updated: 15 March 2023 5:16 AM GMT)

பெங்களூரு அருகே நடைபயிற்சி சென்றபோது காட்டு யானை தாக்கி போலீஸ்காரர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. 3 போலீசார் தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூரு:-

மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நாராயண் சிங் (வயது 34). இவர், மத்திய ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தற்போது அவர், பெங்களூரு புறநகர் மாவட்டம் கக்கலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தெரலு கிராமத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

அந்த கிராமத்தில் பன்னரகட்டா-கக்கலிபுரா ரோட்டில் நாராயண் சிங் தன்னுடன் பணியாற்றும் போலீசாருடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அந்த சாலை வனப்பகுதியையொட்டி அமைந்திருக்கிறது.

யானை தாக்கி சாவு

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து திடீரென்று ஒரு காட்டு யானை வந்தது. அந்த யானையை பார்த்ததும் 4 பேரும் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அந்த யானை நாராயண் சிங் உள்பட 4 பேரையும் பின்தொடர்ந்து விரட்டி சென்றது. விரட்டி சென்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக நாராயண் சிங் மட்டும் யானையிடம் சிக்கி கொண்டார். இதனால் அந்த காட்டு யானை, நாராயண் சிங்கை தும்பிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து தாக்கியது.

இதில், பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அவருடன் வந்த மற்ற 3 போலீசாரும் யானையிடம் சிக்காமல் தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பீதி

இதுபற்றி அறிந்ததும் கக்கலிபுரா போலீசார் விரைந்து சென்று பலியான நாராயண் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கக்கலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காட்டு யானை தாக்கி மத்திய ஆயுதப்படை போலீசார் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story