உத்தரகாண்டில் தொடர் கட்டிட விரிசல்; இஸ்ரோ, ஐ.ஐ.டி.யுடன் பேசி வருகிறோம்: முதல்-மந்திரி தகவல்
உத்தரகாண்டில் தொடர் கட்டிட விரிசல் பற்றி இஸ்ரோ மற்றும் ஐ.ஐ.டி. ரூர்கியுடன் பேசி வருகிறோம் என முதல்-மந்திரி தமி தெரிவித்து உள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமத் நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது. இதில், பெரிய அளவில் விரிசல்கள் விட்டு உள்ளன. அந்த பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று அந்த நகரின் மார்வாரி பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது, கோவில் ஒன்று நேற்று விழுந்துள்ளது. நில பகுதியும் பூமிக்குள் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரகாண்டில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இமயமலை நகரம் என அழைக்கப்படும் ஜோஷிமத் நகரானது உள்ளது. நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை அது கொண்டுள்ளது. இந்நிலையில், அவசரகால நிலையை உணர்ந்த அரசும் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழுவினர், ஜோஷிமத் பகுதியில் உள்ள மக்களை மீட்டு, நகராட்சி கட்டிடங்கள், குருத்வாராக்கள் மற்றும் பள்ளி கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு அவர்களை கொண்டு சென்று தங்க வைத்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க ஜோஷிமத் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகளில் விரிசல்கள் விட்டுள்ளன.
இதனால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் இந்த நிலை காணப்படுகிறது. வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும் ஆபத்து நிலை ஏற்பட்டு உள்ளது. சிறிய அளவில் மழை பெய்து விட்டாலும், அது நகரின் பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
ஜோதிர்மத் கோவிலின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்ட நிலையில், முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி தலைமையில் உயர்மட்ட கூட்டம் ஒன்று செயலகத்தில் நடந்து மறுசீராய்வு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு மக்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்காக பெரிய அளவில் தற்காலிக புனரமைப்பு மையம் அமைக்கவும் தமி உத்தரவிட்டு உள்ளார். அடுத்த உத்தரவு வரும்வரை, அந்த பகுதியில் அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் முதல்-மந்திரி தமி இன்று ஆய்வு பணிகளில் ஈடுபட சென்றுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி ஹரீஷ் ராவத்தும் ஆய்வு செய்ய செல்ல உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், தொடர்ந்து இந்த விரிசல் ஏற்பட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட பின்பு முதல்-மந்திரி தமி கூறும்போது, ஒவ்வொருவரையும் பாதுகாப்பதற்காக முயற்சித்து வருகிறோம். தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராகி வருகிறோம். எங்களது முதல் வேலை மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்வது ஆகும்.
இதற்காக புவிஅறிவியலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். கவுகாத்தி மையம், ஐ.ஐ.டி. ரூர்கி மற்றும் இஸ்ரோவுடனும் நாங்கள் பேசி வருகிறோம். இந்த விரிசல் ஏற்படுவற்கான காரணம் என்னவென்று ஒவ்வொருவரும் அறிய முயன்று வருகிறோம்.
இந்த பகுதியிலுள்ள மக்களை புலம்பெயர செய்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது பற்றியும் நாங்கள் கூர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கான சரியான இடம் பற்றி தேர்வு செய்தும் வருகிறோம். இது குளிர்காலம். அதனால், இந்த விவகாரம் பற்றி உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.