சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவ கல்லூரி மாணவர் சாவு
சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
மங்களூரு:
சிவமொக்காவை சேர்ந்தவர் நிகில் (வயது 23). இவர் உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நிகில் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அதாவது 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். நிகிலின் நண்பர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். நிகில் பின்னால் அமர்ந்திருந்தார். இந்த நிலையில், திடீரென்று அவர்கள் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் நிகில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.