பெங்களூருவில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை


பெங்களூருவில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் நடுரோட்டில் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

வாலிபர் கொலை

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா 5-வது பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு வாலிபர் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், வாலிபரை வழிமறித்து தகராறு செய்தார்கள். இந்த நிலையில், நடு ரோட்டில் வைத்து வாலிபரை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் சுருண்டு விழுந்தார்.

பின்னர் அங்கு கிடந்த கல்லால் வாலிபரின் முகத்தில் அந்த கும்பலினர் கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிகிறது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. நேற்று அதிகாலையில் இதுபற்றி தகவல் அறிந்ததும் கே.பி.அக்ரஹாரா போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

அவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரது முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு கல்லால் தாக்கி மர்மநபர்கள் சிதைத்திருந்தது தெரியவந்தது. முன்னதாக சம்பவ இடத்திற்கு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். அப்போது கொலையான வாலிபரின் உருவம் ஒரு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். வாலிபரை பற்றி அடையாளம் தெரிந்தால், தகவல் தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

6 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி நிருபர்களிடம் கூறுகையில், கே.பி.அக்ரஹாரா 5-வது கிராசில் வைத்து 30 வயது வாலிபரை 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தலைமறைவாகி விட்ட 6 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலையான வாலிபரை அடையாளம் காணும் பணிகளும் நடந்து வருகிறது என்றார்.

இதுகுறித்து கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்கள் உள்பட 6 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story