புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் பக்கத்து வீட்டு மாடிக்கு தாவிய வாலிபர் கீழே விழுந்து சாவு


புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் பக்கத்து வீட்டு மாடிக்கு தாவிய வாலிபர் கீழே விழுந்து சாவு
x

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தனது வீட்டு மாடியில் இருந்து, பக்கத்து வீட்டு மாடிக்கு தாவினார். அப்போது அவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பெங்களூரு:

மதுஅருந்தி கொண்டாட்டம்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரகாந்த் பாத்ரா(வயது 38). இவர், பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொட்டிகே பாளையாவில் உள்ள ஒரு வீட்டின் 4-வது மாடியில் வாடகைக்கு வசித்து வந்தார். கொட்டிகேபாளையாவில் உள்ள ஒரு காட்டன் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் எந்திர ஆபரேட்டராக சந்திரகாந்த் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை தனது நண்பர்களுடன் மதுஅருந்தி சந்திரகாந்த் கொண்டாடினார். தான் தங்கி இருக்கும் 4-வது மாடியில் வீட்டு முன்பாக திறந்த வெளியில் அமர்ந்து சந்திரகாந்த்தும், அவரது நண்பர்களும் மதுஅருந்தினார்கள்.

பக்கத்து மாடிக்கு தாவியதால்...

இந்த நிலையில், 4-வது மாடியில் இருந்து திடீரென்று சந்திரகாந்த் கீழே விழுந்தார். இதில், தலை, உடலில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், சந்திரகாந்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சந்திரகாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காமாட்சி பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சந்திரகாந்த் மதுஅருந்தி உள்ளார். குடிபோதையில் 4-வது மாடியில் இருந்து பக்கத்து வீட்டின் மாடிக்கு சந்திரகாந்த் தாவி செல்ல முயன்றதாக தெரிகிறது. அந்த சந்தர்ப்பத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து அவர் உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story