உப்பள்ளியில் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்
உப்பள்ளியில் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
உப்பள்ளி:
மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ
உப்பள்ளி தரிஹால் தொழிற்சாலை பகுதியில் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று அந்த தொழிற்சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. மேலும் 8 ஊழியர்களும் தீயில் சிக்கிக் கொண்டனர்.
8 பேர் படுகாயம்
இதுபற்றி அறிந்ததும் கோகுல்ரோடு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பிடித்து எரிந்த தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீயில் சிக்கியவர்களையும் போலீசார், தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். 8 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விசாரணையில் படுகாயமடைந்தவர்கள், சன்னவ்வா (வயது 42), பிரேமா (20), மல்லேஷா (27), நன்னிமா (35), விஜயலட்சுமி (34), மல்லிகரேஹானா (18), நிர்மலா (29), கௌரவ் (45) என்பது தெரியவந்தது.
3 பேரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்
தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் கோகுல்ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் காளி மிர்ச்சி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்துக்குள் புகுந்து 3 பேரை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.