மைசூருவில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மைசூருவில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மைசூரு:-
மாணவர்கள் போராட்டம்
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதனை கண்டித்தும், கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தையும் கண்டித்தும் 17-ந்தேதி (நேற்று) போராட்டம் நடத்த மாணவ-மாணவிகளுக்கு இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பு (என்.எஸ்.யூ.ஐ.) அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
மைசூரு நகரம் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கல்வி உதவித்தொகை
இந்த போராட்டத்தின்போது மாணவ-மாணவிகள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில், எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகையை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ெபாருளாதாரத்தில் பின்தங்கி உள்ள அவர்கள், இந்த கல்வி உதவித்தொகை பெரும் பயனுள்ளதாக இருந்தது. இதனால் கல்வித்தொகை ரத்து முடிவை அரசு வாபஸ் பெற வேண்டும். கல்லூரி மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பற்றி மாநில அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. தேர்வு கட்டணம், நுழைவு கட்டணத்தை உயர்த்தி தொந்தரவு கொடுத்து வருகிறது. கிராமப்பகுதியில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு சரியான பஸ் வசதி கிடையாது. இந்த தொந்தரவுகளால் ஏராளமான மாணவர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளனர் என்றனர்.
கலெக்டரிடம் மனு
பின்னர் கல்லூரி மாணவ-மாணவிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.