ஒட்டு மொத்த நாட்டை அவமதிக்கும் செயல்- அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
ஒட்டு மொத்த நாட்டை அவமதிக்கும் செயல் என்று அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: சுதந்திர தின பவள விழாவையொட்டி கா்நாடக அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருந்த விளம்பரத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டு இருந்ததை முன்னாள் மந்திரி ஈசுவரப்பாவும் வரவேற்று இருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-
நமது நாடு சுதந்திரம் அடைவதற்காக நேருவின் பங்கு என்ன? என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களில் நேருவும் ஒருவர் ஆவார். அப்படிப்பட்ட ஒரு தலைவரின் புகைப்படத்தை புறக்கணித்திருப்பது. ஒட்டு மொத்த நாட்டையே அவமதிக்கும் செயல் ஆகும். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிய சாவர்க்கரின் புகைப்படம் அரசு விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது. பா.ஜனதா அரசு திட்டமிட்டு நேரு புகைப்படத்தை புறக்கணித்துள்ளது. சுதந்திர தின பவள விழாவுக்காக வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும்படி பா.ஜனதாவினர் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் பா.ஜனதாவினருக்கு தேசிய கொடி, தேசிய கீதம், நமது நாட்டு ராணுவ வீரா்கள் மீது மரியாதை இல்லை. நாட்டில் வெறுப்பு மற்றும் மதவாத அரசியலை ஊக்குவிப்பதில் மட்டுமே பா.ஜனதாவினர் கவனம் செலுத்துகிறார்கள். பா.ஜனதாவினருக்கு இந்த நாட்டு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.