நாகபாம்புக்கு பூஜை செய்து வழிபட்ட வனவிலங்கு ஆர்வலர்
நாகர பஞ்சமியையொட்டி வனவிலங்கு ஆர்வலர்கள் ஒருவர் நாகபாம்புக்கு பூஜை செய்து வழிபட்டார்.
கார்வார்:
உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி அருகே பிசாலகொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஹூலேகல். வனவிலங்கு ஆர்வலரான இவர் நேற்று நாகர பஞ்சமியை முன்னிட்டு வனப்பகுதியில் ஒரு நாகபாம்பை பிடித்தார். பின்னர் நாகபாம்புக்கு அவர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் நாகபாம்புக்கு பால் வைத்தார். அதையடுத்து அந்த நாகபாம்பு மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது. இதுகுறித்து பிரசாந்த் ஹூலேகல் கூறுகையில், பாம்புகளை பற்றி மக்களிடம் தவறான எண்ணம் உள்ளது. அதனை போக்கவும், அச்சத்தை போக்கவும் நான் உயிருள்ள பாம்பை பிடித்து சோதனை நடத்தியுள்ளேன். பாம்புகளை கொல்லக்கூடாது. அது நமக்கும் விவசாயத்துக்கும் துணையாக உள்ளது என்றார்.
இதுபோல் நாகர பஞ்சமியை முன்னிட்டு உடுப்பி மாவட்டம் காபு தாலுகா மசூரில் கோவர்த்தனா பட் என்பவர் உயிருள்ள நாகபாம்புக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்தினார். இவர் வாகனங்களில் சிக்கி அடிபட்டு உயிருக்கு போராடும் பாம்புகளை மீட்டு சிகிச்சை அளித்து பாதுகாத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.