காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதானவர்: பெண் போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பி ஓடியவர் சுட்டுப்பிடிப்பு


காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதானவர்: பெண் போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பி ஓடியவர் சுட்டுப்பிடிப்பு
x

கலபுரகியில் காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதானவர் பெண் போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடியபோது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.

கலபுரகி:

காங்கிரஸ் பிரமுகர் கொலை

கலபுரகி மாவட்டம் சகாபாத் டவுன் பகுதியை சேர்ந்தவர் கிரீஸ் (வயது 35). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், நகரசபை முன்னாள் தலைவர் ஆவாா். இவரை கடந்த 5 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சகாபாத் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கிரீசை கொலை செய்ததாக விஜய் ஹல்லி என்பவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சகாபாத் போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக விஜய் கூறினார். இதனால் நேற்று காலை மறைத்து வைத்த ஆயுதங்களை எடுக்க விஜயை போலீசார் அழைத்து சென்றனர்.

பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு

அப்போது கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எடுத்து போலீசாரிடம் விஜய் கொடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் சகாபாத் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சுவர்ணாவின் கையில் விஜய் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்தாப்புரா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனாலும் சரண் அடைய விஜய் மறுத்தார். இதனால் விஜயை நோக்கி பிரகாஷ் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அவரது வலது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். பின்னர் விஜயை போலீசார் கைது செய்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விஜய் அரிவாளால் வெட்டியதில் கையில் கையில் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுவர்ணா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிண்டு இஷா பந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சகாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story