ராகுல் காந்தி பிரதமர் ஆகும் வரை... 12 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடந்து வரும் இளைஞர்


ராகுல் காந்தி பிரதமர் ஆகும் வரை... 12 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடந்து வரும் இளைஞர்
x

ராகுல் காந்தி பிரதமர் ஆகும் வரை காலணிகள் வேண்டாம் என 12 ஆண்டுகளாக வெறுங்காலுடன் பட்டதாரி இளைஞர் ஒருவர் நடந்து வருகிறார்.



புதுடெல்லி,


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். அவரது யாத்திரை, தமிழகம், கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது.

இந்த யாத்திரையில் அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். யாத்திரையில், ராகுல் காந்தியின் உருவம் கொண்ட கட்சி தொண்டர் ஒருவரும் பங்கேற்றார்.

இதேபோன்று, ராகுல் காந்தியுடன் 2.5 மாதங்களாக பயணித்து வருபவர் விக்ரம் பிரதாப் சிங். இவர் பாதயாத்திரையின்போது, வெறுங்காலுடனேயே நடந்து வருகிறார். இதனால், தனது பாதத்தில் வலி ஏற்பட்டு உள்ளது என்று கூறியபோதிலும் தொடர்ந்து காலணிகள் எதுவும் அணியாமலேயே யாத்திரையை தொடருகிறார்.

இதுவரை 1,200 கி.மீ. தொலைவை கடந்து உள்ளார். கடும் குளிர், வேதனை இருந்தபோதும், ராகுலின் யாத்திரை உத்வேகமும், ஊக்கமும் ஏற்படுத்தி உள்ளது என அவர் கூறுகிறார்.

இந்த பாதயாத்திரையின்போது, கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் மகன் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான சாண்டி உம்மன், வெறுங்காலுடனேயே யாத்திரையில் பங்கேற்றார். அது தனக்கு சக்தி தருகிறது என்று கூறினார். அவர் இதுவரை 3 ஆயிரம் கி.மீ. தொலைவை வெறுங்காலுடனேயே யாத்திரையை கடந்து சென்றுள்ளார்.

இதெல்லாம் என்ன பெரிய விசயம் என்பது போல் மற்றொரு நபர் இருக்கிறார். ராகுல் காந்தியின் பாதயாத்திரையின்போது, அவருடனேயே மூவர்ண கொடியை ஏந்தியபடி தினேஷ் சர்மா என்பவர் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளார்.

காவி நிற தலைப்பாகையுடனும், தேசிய கொடியுடன் கூடிய ஆடையணிந்து, அதில் ராகுல் காந்தியின் உருவம் மற்றும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற வாசகமும் தெரியும்படி காணப்படுகிறார். அவரை யாத்திரையில் பங்கேற்கும் பலரும் பண்டிட்ஜி என அழைக்கின்றனர்.

இவர் பாதயாத்திரையில் காலணிகள் இன்றி நடந்தபோது கூறும்போது, ராகுல் காந்தி நாட்டின் பிரதமராகும் வரை வெறுங்காலுடனேயே தொடர்ந்து இருப்பேன் என கூறியுள்ளார். 2011-ம் ஆண்டில் இருந்தே 12 ஆண்டுகளாக அவர் காலணிகள் எதுவுமின்றி தனது முடிவில் உறுதியாக இருந்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

சட்டப்படிப்பு படித்துள்ள அவர், யாத்திரையின்போது, ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்திற்குள் எளிதில் சென்று வரும் வகையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் எம்.பி. ஒருவருக்கு கூட உள்ளே நுழைய கடுமையாக போராட வேண்டியிருந்தது.

இத்தனைக்கும், தினேஷ் எம்.எல்.ஏ.வோ, வர்த்தகரோ கூட கிடையாது. காங்கிரசில் எந்த பதவியிலும் கூட அவர் இல்லை. ராகுல் காந்தி மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் அவரை தெரியும்.


Next Story