தமிழிசையின் ராஜினாமா ஏற்பு; தெலுங்கானா, புதுச்சேரி கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு


தமிழிசையின் ராஜினாமா ஏற்பு; தெலுங்கானா, புதுச்சேரி  கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
x

தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சென்னை,

தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தமிழிசை சவுந்தரராஜன், வரும் மக்களவையில் போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன். தெலுங்கானா, புதுச்சேரி மக்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன் என தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியிருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததை அடுத்து தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் பதவிகள் காலியானது. இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் பொறுப்புகளை சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் எனவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநில கவர்னராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் பொறுப்புகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இதில் தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், அதே ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது.

வரும் தேர்தலில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க சார்பில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story