தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பால்... பா.ஜனதா 'மைனாரிட்டி'அரசாக உள்ளது - தமிழச்சி தங்கப்பாண்டியன்


தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பால்... பா.ஜனதா மைனாரிட்டிஅரசாக உள்ளது - தமிழச்சி தங்கப்பாண்டியன்
x

கோப்புப்படம்

மத்திய அரசுக்கு தமிழ்நாட்டிற்கு கிள்ளி கொடுக்க கூட மனமில்லை என தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

தமிழக மக்களின் சரியான தீர்ப்பால்தான் பா ஜனதா 'மைனாரிட்டி' அரசாக உள்ளது என்று தி மு க எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.

மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், "காழ்ப்புணர்வு, விருப்பு-வெறுப்பு இன்றி அனைத்து மக்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம் நமக்கு தந்திருக்கிற மக்களாட்சியின் மகத்துவம். ஆனால் அதை மறந்துவிட்டு தமிழ்நாடு, தமிழ் என்கிற சொற்களே இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

எனவே, நான் எனது தாய்த்தமிழில் பேசுகிறேன். பிரதமர் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தும் ஒரு இடம்கூட வெற்றி பெறவில்லை. அதற்காக பட்ஜெட்டில் பழி வாங்கிவிட்டார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி.யில் பீகார் கொடுத்தது ரூ,1,992 கோடி. தமிழ்நாடு கொடுத்தது ரூ,12,210 கோடி. ஆனால் பட்ஜெட்டில் பீகாருக்கு ஒதுக்கப்பட்டது ரூ,37,500 கோடி. தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியம். இதுதான் பிரதமர் சொல்லும் உலகம் ஒரே குடும்பமா? நீதி பரிபாலனமா? தமிழகம் கேட்ட வெள்ள நிவாரணத்தொகை ரூ,37 ஆயிரம் கோடி. ஆனால் தரப்பட்டதோ ரூ,276 கோடி. இதுதான் பிரதமர் சொன்ன அகண்ட பாரதமா?

இதனால்தான் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் புறக்கணித்து இருக்கிறார். இது நாட்டுக்கான பட்ஜெட் அல்ல. கூட்டணிக்கான பட்ஜெட். மாநிலங்களை மாற்றாந்தாயாக நடத்துகிற பட்ஜெட். எங்கள் மக்கள் மிகச்சரியான தீர்ப்பை வழங்கியதால்தான் மெஜாரிட்டியாக இருந்த பா ஜனதா அரசு மைனாரிட்டி அரசாகி இருக்கிறது.

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கொரு குணமுண்டு. இது மாறாது. தமிழர்களையும், தமிழ்நாட்டையும் வஞ்சிக்கும் போக்கு தொடருமேயானால் சிலப்பதிகாரத்தில் இளங்கோவன் சொன்னது போல "அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்" என்று அவர் கூறினார்.

1 More update

Next Story