அசாமில் பெண் மீது ஆசிட் வீச்சு- குற்றவாளி கைது
அசாமில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார்,
தேஜ்பூர்,
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் அந்த பெண் பலத்த காயம் அடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 35 வயதுடைய பெண் தனது ஸ்கூட்டரில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஒரு இளைஞன், இளம்பெண்ணை மறித்து பைக்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், அப்பெண் மறுப்பு தெரிவித்து அப்பகுதியில் இருந்து புறப்பட முயன்றபோது, பெண்ணின் மீது இளைஞர் ஆசிட்டை வீசினார்.
ஆசிட் வீச்சால், பெண்ணின் தலை, கழுத்து மற்றும் காதில் தீக்காயம் ஏற்பட்டது. தற்போது அப்பெண் ஒரு தனியார் மருத்துவமனையின் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டதோடு, ஆசிட் வீச்சுக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.