வினய் குருஜிக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் நிலையம் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்


வினய் குருஜிக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் நிலையம் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:45 PM GMT)

சந்திரசேகருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக வினய் குருஜிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சிக்கமகளூரு:

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக...

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கவுரிகத்தே பகுதியை சோ்ந்தவர் வினய் குருஜி. சாமியாரான இவரை கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந்தேதி ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் தம்பி மகன் சந்திரசேகர் என்பவர் சந்தித்து பேசினார். இதையடுத்து சந்திரசேகர் திரும்பி செல்லும்போது, துங்கா கால்வாயில் கார் பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சாவில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், வினய் குருஜிக்கு எதிராக சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்தை பரப்பி வருகிறார்கள்.

அதாவது வினய் குருஜி, தனது மடத்தில் வைத்து சந்திரசேகருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போராட்டம்

இந்த நிலையில் வினய் குருஜிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கொப்பா போலீஸ் நிலையம் முன்பு அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், வினய் குருஜியின் புகழை கெடுக்கவும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் சிலர் முயற்சி செய்கிறார்கள். வினய் குருஜி பற்றி அவதூறு கருத்து பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story