ராமநகரில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை-மந்திரி அஸ்வத் நாராயண்
ராமநகரில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ராமநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழைக்கு சன்னபட்டணாவில் உள்ள பல்வேறு கிராமங்கள் தண்ணீர் மூழ்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமானதுடன், வீடுகளும் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தது. இதையடுத்து, ராமநகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவில் மழையால் பாதித்த கிராமங்களை மாவட்ட பொறுப்பு மந்திரி அஸ்வத் நாராயண் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநகர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்ததால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும் அனைத்து வீடுகளுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2 மடங்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல், பயிர்கள் சேதம் அடைந்திருப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.