எப்.பி.ஓ. பங்குகள் வாபஸ்: அதானி நிறுவனத்தின் முடிவால் இந்தியாவின் அந்தஸ்துக்கு பாதிப்பா? மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில்


எப்.பி.ஓ. பங்குகள் வாபஸ்: அதானி நிறுவனத்தின் முடிவால் இந்தியாவின் அந்தஸ்துக்கு பாதிப்பா?  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில்
x

எப்.பி.ஓ. பங்குகளை வாபஸ் பெறும் அதானி நிறுவனத்தின் முடிவால் இந்தியாவின் பொருளாதார அந்தஸ்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அதானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி

அதானி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக சுமார் ரூ.8.22 லட்சம் கோடிக்கு மேலாக அதானி குழும பங்கு மதிப்பு சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பொதுமக்கள் பெரும் முதலீடுகளைச் செய்துள்ள எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதால் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பி வருகின்றன.

அதானி நிறுவனம் திடீர் முடிவு

இதற்கு மத்தியில் ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம் எப்.பி.ஓ. பங்குகளை விற்கப்போவதாக அறிவித்தது. ஆனால் திடீரென இந்த முடிவில் இருந்து பின்வாங்கி வாபஸ் பெற்றது.

இந்த நிலையில் மும்பையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

இந்த விவகாரத்தை நாட்டின் சுதந்திரமான நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்பினர் பரிசீலிப்பார்கள். பங்குச்சந்தைகளில் ஸ்திரத்தன்மையை அதற்கான ஒழுங்குமுறை அமைப்பான 'செபி' உறுதி செய்கிறது. சந்தைகளை முதன்மை நிலையில் வைத்திருப்பதற்கு 'செபி'தான் அதிகாரம் படைத்த அமைப்பு ஆகும். பாரத ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தை பேசி உள்ளது. வங்கித்துறையானது மீட்சியுடனும், நிலைத்தன்மையுடனும் உள்ளது என ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார அந்தஸ்து பாதிப்பா?

ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எப்.பி.ஓ. பங்குகள் விற்பனை முடிவை அதானி நிறுவனம் திரும்பப்பெற்றது பற்றி கேட்கிறீர்கள். நமது பெரும் பொருளாதார அடிப்படைகள் அல்லது நமது பொருளாதாரத்தின் நிலை என எதுவும் பாதிக்கப்படவில்லை. எப்.பி.ஓ. பங்குகள் வரலாம். எப்.ஐ.ஐ.கள் (வெளிநாட்டு நிறுவன ரீதியிலான முதலீட்டாளர்கள்) வெளியேறலாம். ஒவ்வொரு சந்தையிலும் "ஏற்ற இறக்கங்கள்" உள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட வளர்ச்சி, இந்தியா மற்றும் அதன் உள்ளார்ந்த பலம் ஆகிய இரண்டும் அப்படியே உள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதானி குழுமம், நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ரூ.20 ஆயிரம் கோடி எப்.பி.ஓ. பங்கு விற்பனையை திரும்பப்பெறும் முடிவால், இந்தியாவின் பொருளாதார அந்தஸ்து பாதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story