தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: இன்று ரெயில் மறியல் அறிவிப்பு


தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: இன்று ரெயில் மறியல் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சண்டிகார்,

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் பஞ்சாப்பில் இருந்து கடந்த மாதம் 13-ந் தேதி டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அதேநேரம் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ள அவர்கள், இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ரெயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி நாடு முழுவதும் இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபடுவார்கள் என கிஷான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் செய்தியாளர்களிடம் கூறினார். சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் கீழ் வரும் அனைத்து விவசாய சங்கங்களும் நாடு முழுவதும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சண்டிகாரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வேளாண் சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நாட்டின் விவசாயிகளை பாதுகாப்பதற்கு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது' என்றார். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


Next Story