மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரே தலைவர் பிரதமர் மோடி..! மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம்


மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரே தலைவர் பிரதமர் மோடி..! மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம்
x
தினத்தந்தி 30 Aug 2022 9:26 AM GMT (Updated: 30 Aug 2022 9:28 AM GMT)

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமரின் ஆட்சி மற்றும் நிறுவன திறன்களை பாராட்டினார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி அலுவலக செய்திப்பிரிவு செயலாளராக உள்ள அனுபவமிக்க மூத்த பத்திரிகையாளர் அஜய் சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

"புதிய பாஜகவின் சிற்பி: நரேந்திர மோடி எப்படி கட்சியை மாற்றினார்" என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகம் பிரதமர் மோடியை பற்றி எழுதப்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமரின் ஆட்சி மற்றும் நிறுவன திறன்களை பாராட்டினார். அவர் பேசியதாவது:-

மகாத்மா காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர் பிரதமர் மோடி மட்டுமே, அப்படிச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

மோடி தன்னை நம்பும் நபர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார்.தற்கால அரசியலில் மோடிக்கு இணை இல்லை. சித்தாந்தத்தில் சமரசம் செய்யாமல், தனது கண்டுபிடிப்புகளால் பாஜகவை "வாக்கெடுப்பு வெற்றி இயந்திரமாக" மாற்றியிருக்கிறார் மோடி.

பாஜகவின் சித்தாந்தம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் கடந்த எட்டு ஆண்டுகளில் கட்சியின் வெல்லமுடியா பயணத்திற்கு பங்களித்திருக்கலாம். ஆனால், இந்தக் கருத்தை மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் மோடியின் உத்திக்கு இணையாக எதுவும் இல்லை.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் அவருக்கு எந்தப் பணி ஒதுக்கப்பட்டதோ, அதை மோடி எதிர்பார்த்ததை விட அதிகமாகச் செய்தார். சுதந்திர இந்தியாவில் அவரைப் போன்ற தலைவர் வேறு யாரும் இல்லை.மோடியின் நீடித்த புகழ் இந்திய மட்டுமின்றி உலக தலைவர்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.

பிரதமர் மீது மக்கள் சோர்வடையவில்லை. விரைவான மற்றும் கடினமான முடிவுகளை எடுக்கும் மோடியின் தைரியம் மக்கள் மத்தியில் அவரது அந்தஸ்தை விரிவுபடுத்தியுள்ளது. அவருடைய அரிய ஆளுமை மற்றும் நிறுவனத் திறன் அப்படி. தெய்வீகத் திறன் இல்லாமல் அது சாத்தியமில்லை என்று நான் நம்புகிறேன்.

சாதி, சமூகம் என்ற எல்லைகளை உடைத்து ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளார்.மோடியால் எதுவும் சாத்தியம் என்பது வெறும் கோஷம் அல்ல, அது உண்மை.

கட்சி அமைப்பும், அரசாங்கமும் எந்த வேறுபாடும் இல்லாத ஒரே பக்கத்தில் இருக்கும்படியான கட்டமைப்பை மோடி உருவாக்கியுள்ளார். 2014 ஆம் ஆண்டில் மோடி அதன் முக்கியத் தலைவராக வந்ததிலிருந்து பாஜகவின் எழுச்சிக்குப் பிறகு, கட்சியின் அடித்தளம் விரிவடைந்து வருவதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கூறுகையில், மோடியைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன, ஆனால் அவரைப் புரிந்துகொள்வதற்கு "இதுவே சிறந்தது" என்றார்.

பிரதமர் மோடி ஜாதி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி தனிப்பட்ட மற்றும் அரசியல் ஒழுக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளார் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.

மோடி மக்களுடன் தொடர்ந்து உரையாடி புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளார்.மோடியின் கொள்கைகளால், ஜம்மு-காஷ்மீர் இப்போது வளர்ந்த மாநிலங்களுடன் போட்டியிட முடிகிறது என்று கூறினார்.


Next Story