காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளிக்கு எதிராக
காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கி கோளிக்கு எதிராக மந்திரி சசிகலா ஜோலே தலைமையிலான பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, இந்து மதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீராமசோனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், இந்து மதம் குறித்து தவறாக பேசிய சதீஸ் ஜார்கிகோளி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், சதீஸ் ஜார்கிகோளிக்கு எதிராக பெலகாவி மாவட்டம் நிப்பானியில் மந்திரி சசிகலா ஜோலே தலைமையில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சதீஸ் ஜார்கிகோளிக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பியதுடன், உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அத்துடன் சதீஸ் ஜார்கிகோளி புகைப்படத்திற்கு கருப்பு மை பூசியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.