தவறான இந்திய வரைபடத்துடன் விமான நிலைய 'பாஸ்' திரும்ப பெறப்பட்டன
விமான நிலையத்தில் பயணிகள் அல்லாதவர்கள் நுழைவதற்காக அனுமதிச்சீட்டுகள் (பாஸ்) வழங்கப்படுகின்றன.
புதுடெல்லி,
விமான நிலையத்தில் பயணிகள் அல்லாதவர்கள் நுழைவதற்காக அனுமதிச்சீட்டுகள் (பாஸ்) வழங்கப்படுகின்றன. அந்தவகையில் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் அதானி குழுமம் மூலம் இயக்கப்படும் விமான நிலையங்களில் வழங்கப்பட்ட மேற்படி பாஸ்களில் உள்ள இந்திய வரைபடம் தவறாக அச்சிடப்பட்டு இருந்தது.
காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியம், ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகள் தவறாக அச்சிடப்பட்டிருந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மேற்படி பாஸ்கள் அனைத்தையும் மத்திய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு மேற்படி பாஸ்களை திரும்பப்பெறவும், அச்சிடுதலை நிறுத்தவும் செய்யுமாறு விமான நிலைய ஆணைய தலைவருக்கு இந்த பிரிவு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தி உள்ளது.