பெலகாவியில் நடந்த பயிற்சி முகாமிற்கு வந்த தமிழக ராணுவ வீரர்களின் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள் திருட்டு
பெலகாவியில் நடந்த பயிற்சி முகாமிற்கு வந்த தமிழக ராணுவ வீரர்களின் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.
பெலகாவி:
நக்சல் ஒழிப்பு பயிற்சி
பெலகாவி அருகே ஹலபாவி கிராமத்தில் இந்தோ-திபெத் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமில் தற்போது நக்சல் ஒழிப்பு பயிற்சி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதுபோல இந்த முகாமில் தமிழ்நாடு மதுரையில் பணியாற்றி வரும் ராஜேஷ்குமார், சந்தீப் மீனா ஆகியோரும் கலந்துெகாண்டனர். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி பயிற்சி முடிந்ததும் முகாமில் உள்ள 3-வது மாடியில் ராஜேஷ்குமாரும், சந்தீப் மீனாவும் தங்களது ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளை அருகில் வைத்து தூங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த அறைக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளை திருடி சென்று விட்டனர். ராஜேஷ்குமாரும், சந்தீப் மீனாவும் கண் விழித்து பார்த்த போது துப்பாக்கி திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தனிப்படை அமைப்பு
அதன்பேரில் முகாமுக்கு வந்து ராணுவ அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் காகதி போலீசாரும் அந்த முகாமுக்கு சென்று ராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் துப்பாக்கி திருடப்பட்டது குறித்து காகதி போலீசார் இந்திய ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மேலும் துப்பாக்கிகளை கண்டுபிடிக்க பெலகாவி துணை போலீஸ் கமிஷனர் சினேகா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.