அசாமில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு கிளை பரப்ப முயற்சி; 11 பேர் கைது
அசாமில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தனது கிளைகளை பரப்பி, கால்பதிக்க முயற்சிக்கிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கவுகாத்தி,
அசாமில் அல்-கொய்தா எனப்படும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தனது கிளைகளை பரப்பி, கால்பதிக்க முயற்சிக்கிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி அசாம் காவல் துறையின் கூடுதல் டி.ஜி.பி. ஹிரேன் நாத் (சிறப்பு பிரிவு) கூறும்போது, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு அசாமில் கால்தடம் பதித்து, அடித்தளம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டது.
ஆனால், அதுபற்றிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. இதனை தொடர்ந்து உடனடியாக செயல்பட்டு, அதனை கண்டறிந்து உள்ளோம். அனைத்து பிரிவுகளின் செயல்பாடுகளையும் நாங்கள் கண்டறிந்து உள்ளோம்.
அவர்கள் வெவ்வேறு பெயர்களில் ரகசியமுடன் தங்களது செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் தனிநபர் மற்றும் ஒரு குழுவினருக்கு போதனைகளை வழங்கும் செயல்களில் ஈடுபட்டு மக்களிடம் தங்களது செல்வாக்கை அதிகரித்து வந்துள்ளனர்.
அசாமில் சமீபத்தில் மோரிகாவன் மற்றும் பார்பேட்டா மாவட்டங்களில் இந்திய துணை கண்டத்தில் அல்-கொய்தா அமைப்பு மற்றும் அன்சாருல்லா பங்க்ளா குழு என இரண்டு பிரிவுகளை நாங்கள் கண்டறிந்து உள்ளோம். இவற்றுடன் தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளோம் என தெரிவித்து உள்ளார்.
அவர்கள் சில ஜிகாதி இலக்கியங்களை மொழி பெயர்த்து, வங்காளம் மற்றும் அசாம் மொழிகளில் வெளியிட்டு உள்ளனர். அசாமுக்கு தொடர்பில்லாத இவற்றை வினியோகித்தும் வந்துள்ளனர். அசாம்-அருணாசல பிரதேச எல்லை பகுதிகளிலும் கால்தடம் பதிக்கும் சில முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.