கர்நாடகத்தில் மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு- மந்திரி ஆர்.அசோக் தகவல்


கர்நாடகத்தில் மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளில்  நிவாரண பணிகளுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு-  மந்திரி ஆர்.அசோக் தகவல்
x

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

24 கிராமங்கள் பாதிப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. ராமநகர், பெங்களூரு, சாம்ராஜ்நகர், மைசூரு, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மழை பாதிப்புகளை தடுக்க நாங்கள் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அடுத்த 3, 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் 27 மாவட்டங்களில் 890 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சில இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளதால் சேதங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. ராமநகர், சாம்ராஜ்நகர், மண்டியாவில் 24 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாய பயிர்கள்

ராமநகரில் 2 பேரும், ஹாவேரியில் ஒருவரும் என மொத்தம் 3 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் பெய்த மழையால் 1,187 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இதுவரை மாநிலத்தில் 29 ஆயிரத்து 967 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 96 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக 9 ஆயிரத்து 555 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டனர். மழையால் 5.8 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 1,471 பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. 2,221 மின் கம்பங்கள், 2,223 கிலோ மீட்டர் சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு கர்நாடகத்திற்கு ரூ.1,012 கோடி வழங்க வேண்டும். இதை விரைவாக வழங்குமாறு கேட்டுள்ளோம்.

ரூ.250 கோடி ஒதுக்கீடு

கர்நாடகத்தில் மழைக்கு இதுவரை ரூ.7 ஆயிரத்து 647 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வசதிக்காக 7 இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

5 தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுக்களை வெள்ள பகுதிகளுக்கு அனுப்பியுள்ளோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாகவே அந்த திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story