சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் அம்பேத்கர் சிலை - ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்


சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் அம்பேத்கர் சிலை - ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்
x

இந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கு தனியாக அரசியலமைப்பு சட்டம் தேவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவராக சட்டமேதை அம்பேத்கர் இருந்தார். அரசியலமைப்பை உருவாக்குவதில் அவரது பங்குதான் முக்கியமாக இருந்தது. இதனால்தான் அவர் 'அரசியலமைப்பின் தந்தை' என வர்ணிக்கப்படுகிறார்.

இவரது தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பை இந்திய அரசியல் நிர்ணயசபை கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொண்டது. இதன் பிறகு 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி அது நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பை அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்ட நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது இந்திய சட்டதினம் என அழைக்கப்படுகிறது.

இதன்படி இந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 அடி உயர சட்டமேதை அம்பேத்கர் சிலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story