எதிர்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம்வரை ஒத்தி வைப்பு


எதிர்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம்வரை ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 14 March 2023 5:55 AM GMT (Updated: 14 March 2023 7:51 AM GMT)

தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதனிடையே, கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. தொடங்கிய உடனே, ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து எழுப்பினர்.

தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தைக் குறை கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். ராகுல்காந்தி மன்னிப்புகேட்க பாஜக வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியும் முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், மக்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மதியம் 2 மணிக்கு மேல் அவை கூடும்போதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் பட குழு மற்றும் தி எலிபேண்ட்ஸ் விஸ்பர்ஸ் குறும்பட குழுவுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் அதானி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையும் மதியம் 2 மணி ஒத்திவைக்கப்பட்டது.


Next Story