கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை


கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து  பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
x

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷா ஆலோசனை

உள்துறை மந்திரி அமித்ஷா, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக ஓட்டலில் அவரை முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது 2 பேரும் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். மேலும் அவர்கள் 2 பேரும் கர்நாடகத்தில் பா.ஜனதாவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

வரும் நாட்களில் கட்சியை பலப்படுத்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்படி எடியூரப்பாவுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமித்ஷா கூறினார். அமித்ஷா-எடியூரப்பா ஆகியோரின் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.

பிரதமர் மோடி...

அதைத்தொடர்ந்து அமித்ஷாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது கர்நாடகத்தில் சித்தராமையாவின் 75-வது பிறந்த நாள் பவள விழா வெற்றியால் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் பா.ஜனதாவை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் வெற்றி பெற கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள் அனைவரும் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டு கொண்டார். தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி கர்நாடகத்தில் சில கட்சி கூட்டங்களில் பங்கேற்க வைக்க முயற்சி செய்வதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படியும் அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

பால் பவுடர்

அதன் பிறகு அவர் மத்திய அரசின் கலாசாரத்துறை சார்பில் நடைபெற்ற சங்கல்பே சித்தி விழாவில் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு எலகங்காவில் உள்ள கர்நாடக பால் கூட்டமைப்பின் மதர் டெய்ரிக்கு நேரில் சென்று அங்கு பால் பவுடர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை பார்வையிட்டார்.

அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பாலச்சந்திர ஜார்கிகோளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் அங்கிருந்து அவர் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழியனுப்பி வைத்தார்.


Next Story