தத்தா பீடத்தில் பூஜை செய்ய 2 அர்ச்சகர்கள் நியமனம்
தத்தா ஜெயந்தியையொட்டி தத்தா பீடத்தில் பூஜை செய்ய 2 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிக்கமகளூரு:-
தத்தா ஜெயந்தி
சிக்கமகளூரு அருகே சந்திர திரிகோண மலையில் பாபாபுடன் கிரி கோவில் உள்ளது. இங்குள்ள தத்தா கோவிலில் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். மேலும் பாபாபுடன் கிரி கோவிலை இருதரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மாநில அரசு தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இந்த நிலையில் பாபாபுடன் கிரியில் உள்ள தத்தா கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் தத்தா ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்து அமைப்பினர் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.
2 அர்ச்சகர்கள் நியமனம்
தத்தா ஜெயந்தி விழாவையொட்டி சிக்கமகளூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் காவி கொடிகள் கட்டப்பட்டுள்ளது. பாபாபுடன் கிரி மலையிலும் காவி கொடி தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளது. மேலும் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தத்தா ஜெயந்தி விழாவையொட்டி தத்தா பீடத்தில் பூஜை செய்ய 2 அர்ச்சகர்களை 8 பேர் கொண்ட குழு நியமனம் செய்துள்ளது. சிருங்கேரியை சேர்ந்த ஸ்ரீகாந்த், சிக்பள்ளாப்பூரை சேர்ந்த சந்தீப் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தத்தா பீடத்தில் பூஜை செய்ய உள்ளனர்.