சித்ரதுர்கா முருகா மடத்திற்கு நிர்வாக அதிகாரி நியமனம்; கர்நாடக அரசு உத்தரவு
சித்ரதுர்கா முருகா மடத்திற்கு நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
குற்றப்பத்திரிகை தாக்கல்
சித்ரதுர்காவில் முருகா மடம் உள்ளது. அந்த மடம் சார்பில் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி கற்கிறார்கள். இந்த நிலையில் அந்த மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிகள் 2 பேர் பாலியல் பலாத்கார புகார் கூறினர். இதுகுறித்து சித்ரதுர்கா போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவமூர்த்தி முருகா சரணருவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
அவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில் அந்த மடாதிபதி, விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் சிலரை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மடாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அந்த மடாதிபதி சிறைக்கு சென்ற பிறகு மட விஷயங்கள் மற்றும் அதன் மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
நிர்வாக அதிகாரி
அந்த மடத்தை நிர்வகிக்க என்ன செய்வது என்பது குறித்து சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் திவ்யா பிரபு மாநில அரசுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி வைத்தார். அந்த அறிக்கை அடிப்படையில் கர்நாடக அரசு, முருகா மடத்திற்கு அதாவது அதன் அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வஸ்திரத் என்பவரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அவர் பெங்களூருவை சேர்ந்தவர். அட்வகேட் ஜெனரலின் சட்ட ஆலோசனை
மற்றும் சித்ரதுர்கா மாவட்ட கலெக்டரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஆராய்ந்து, பொது நலன் கருதி அந்த மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவ எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.