அரியானா: விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் பலி; முதல்-மந்திரி இரங்கல்


அரியானா:  விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் பலி; முதல்-மந்திரி இரங்கல்
x

அரியானாவில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சண்டிகர்,

'இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கிய பண்டிகையாகும். அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பண்டிகைகளை வீட்டிலேயே மக்கள் கொண்டாடிய நிலையில், இந்த வருடம் பல்வேறு பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதேபோன்று, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்றவை. இதன்படி, அரியானாவில் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.

சோனிபட் நகரில் மீமர்பூர் காட் பகுதியில் தனது மகன் மற்றும் மருமகனுடன் விநாயகர் சிலையை கரைக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மகேந்திரகார் நகரில் ஜகதோலி கிராமம் அருகே கனீனா-ரேவரி சாலையில் அமைந்த கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற 9 பேர் நீரோட்டத்தின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் நேற்றிரவு மீட்கப்பட்டனர். எனினும், 4 பேர் உயிரிழந்து விட்டனர்.

இதனால், அரியானாவில் மொத்த உயிரிழப்பு 7 ஆக உள்ளது. இந்த சம்பவங்களுக்கு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த கடின தருணத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்தினரது துயரில் ஒன்றாக நிற்போம். பலரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர். அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கொள்கிறேன் என அதில் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story