பாபாபுடன் கிரி நிர்வாக குழு தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


பாபாபுடன் கிரி நிர்வாக குழு தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 Dec 2022 12:33 AM IST (Updated: 12 Dec 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

ெகாலை மிரட்டல் வந்ததால் பாபாபுடன் கிரி மலை நிர்வாக குழு தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

பாபாபுடன் கிரி நிர்வாக குழு

சிக்கமகளூரு மாவட்டம் சந்திர திரிகோண மலையில் பாபாபுடன்கிரியில் தத்தா குகைக்கோவில் அமைந்துள்ளது. இங்கு இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் கோவிலை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். பல ஆண்டுகளாக நிலவி வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் நடந்தது. அப்போது, தத்தா கோவில் விவகாரத்தில் மாநில அரசு முடிவு எடுக்கலாம் என அறிவித்தது. அதன்படி மாநில அரசு, தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளது.

கொலை மிரட்டல்

ஆனால் மாநில அரசின் இந்த முடிவுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தத்தா கோவிலில் தத்தா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தத்தா பாதத்திற்கு பூஜை செய்வதற்காக தற்காலிகமாக 2 அர்ச்சகர்களை நிர்வாக குழுவினர் நியமித்தனர். இதற்கும் ஒரு தரப்பினா் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தத்தா கோவிலில் அர்ச்சகர் நியமித்ததை கண்டித்து நிர்வாக குழு தலைவரான பாஷா என்பவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக தெரிகிறது. மேலும் அர்ச்சகர்களுக்கும் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் கூறுகையில், பாபாபுடன்கிரி நிர்வாக குழு தலைவர் பாஷாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 2 அர்ச்சகர்களுக்கும் விரைவில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.


Next Story