புதிய இந்தியாவில் உரிமைகளை பெற போராடினால் கைது செய்யப்படுவீர்கள் - மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!
உத்தரபிரதேசத்தில் போராடியதற்காக மாணவர்களை போலீஸ் கைது செய்யததாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில், ஒரு பேருந்தில் சில மாணவர்களை காவல்துறை அழைத்துச் செல்வதைக் காட்டும் வீடியோவை டுவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். போராடியதற்காக அந்த மாணவர்களை போலீஸ் கைது செய்யததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
"கேள்விகள் கேட்காதே, உன் குரலை உயர்த்தாதே, அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டாம். புதிய இந்தியாவில் உரிமை கோரியதற்காக கைது செய்யப்படும்.
இளைஞர்களை வேலையில்லாதவர்களாக ஆக்கி, கோடிக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையை உடைத்து, இந்த சர்வாதிகார அரசு நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கிறது" என்று தெரிவித்து வீடியோவை பதிவிட்டுள்ளார்.
"எஸ்எஸ்சி தேர்வு எழுதுபவர்கள் செய்த குற்றம் என்ன? நீதி கேட்டதால் அவர்கள் கைது நடந்துள்ளது. நம் நாட்டின் மகள்கள், நாங்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல என்பது போல் நடத்தப்படுகிறார்கள். 'பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ' (பெண் குழந்தைகளைக் காப்போம்) திட்டம் என்று அரசாங்கம் சொல்கிறது, ஆனால் அப்படி நடந்தால் நம் நாட்டின் மகள்கள் இங்கு இப்படி சாக மாட்டார்கள்" என்று கூறினார்.
அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், ஒரு இளம்பெண் தான் காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை, ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. "நாங்கள் நான்கு பேருந்துகளில் வலுக்கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டு, தனித்தனி இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளோம். எங்கே என்று எங்களுக்குத் தெரியவில்லை.
நாக்பூரிலிருந்து புறப்பட்டு வந்த நாங்கள், கடந்த 45 நாட்களில் ஆக்ராவை அடைந்து, பல சிரமங்களை எதிர்கொண்டோம். நாங்கள் தொடங்கிய அதே இடத்திற்கு அரசு எங்களை அனுப்பியுள்ளது. எங்களுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என அரசை வலியுறுத்துகிறோம்'' என்று அவர் கூறினார்.