காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்- அசோக் கெலாட் விருப்பம்


காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்- அசோக் கெலாட் விருப்பம்
x

ராகுல் காந்தி கட்சித் தலைவராக வரவில்லை என்றால், அது நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எனினும் ராகுல் காந்தி இதுபற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது சோனியா காந்தி கட்சியின் தலைவராக இருந்து வரும் நிலையில், வரும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது. இதனால், புதிய காங்கிரஸ் தலைவர் யார்? என்பது குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தியே ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:

ராகுல் காந்தி கட்சித் தலைவராக வரவில்லை என்றால், அது நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும். நாட்டில் உள்ள சாமானிய காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் (ராகுல் காந்தி) இந்த பதவியை தானாக ஏற்க வேண்டும். கட்சிக்குள் ராகுல் காந்தி தலைவராவதற்குதான் ஆதரவான சூழல் இருக்கிறது. கடந்த 32 ஆண்டுகளில் ராகுல் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ பொறுப்பேற்றதில்லை.

பிறகு ஏன் மோடி இந்தக் குடும்பத்தைக் கண்டு பயப்படுகிறார். சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஒரே மாதிரியாகதான் உள்ளது. அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்துச் செல்லும் கட்சி காங்கிரஸ். கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதன் காரணமாகவே இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும், கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகவும் உள்ளனர்" என்றார்.


Next Story