'இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் முயற்சிக்க வேண்டும்' - அசாம் முதல்-மந்திரி


இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் முயற்சிக்க வேண்டும் - அசாம் முதல்-மந்திரி
x

Image Courtacy: PTI

இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் முயற்சிக்க வேண்டும் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

கவுகாத்தி,

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பற்றி கருத்து கூறிய அசாம் பா.ஜ.க. முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, அவர் இந்தியாவுடன் பாகிஸ்தானையும், வங்காளதேசத்தையும் இணைக்க முயற்சிக்க வேண்டும் என கூறினார்.

இந்தியாவை இணைப்போம் என்று சொல்லிக்கொண்டு, பாரத் ஜோடோ யாத்திரையை (இந்திய ஒற்றுமை பயணம்) காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி உள்ளார்.

இதையொட்டி பா.ஜ.க. ஆளும் அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று கவுகாத்தியில் கருத்து தெரிவித்தார. அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, இந்த நூற்றாண்டின் வேடிக்கை. ஏனென்றால் இந்தியா ஒரே நாடு, அது ஒன்றுபட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் ஒரே நாடாக, இந்தியா ஒன்றுபட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்கு அவசியம் இல்லை.

1947-ம் ஆண்டு பாகிஸ்தானை உருவாக்குவதற்காக நாட்டில் பிரிவினை ஏற்பட்டது. பின்னர் வங்காளதேசமும் உருவானது. ராகுல் காந்திக்கு தனது மூதாதையர் உருவாக்கிய பிரச்சினையால் வருத்தம் இருந்தால் அல்லது மன்னிப்பு கேட்க விரும்பினால், அவர் பிளவுபடாத இந்தியாவை உருவாக்குவதற்கு இந்தியாவுடன் பாகிஸ்தானையும், வங்காளதேசத்தையும் இணைக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story