முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது - ராகுல் காந்தி

முன்னாள் அதிபர் மீதான தாக்குதல் சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்புக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி எம்.பி, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com