மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை ஏற்கமுடியாது: சுப்ரீம் கோர்ட்டு வேதனை


மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை ஏற்கமுடியாது: சுப்ரீம் கோர்ட்டு வேதனை
x
தினத்தந்தி 20 July 2023 5:32 AM GMT (Updated: 20 July 2023 5:39 AM GMT)

மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத்தவறினால், சுப்ரீம் கோர்ட்டு தலையிடும் என தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூரில் நிகழ்ந்துவரும் கலவர சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது. மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதிலிருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளதாவது;-

"மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஏற்கவே முடியாது. இது மிகவும் கவலையளிக்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத்தவறினால், சுப்ரீம் கோர்ட்டு தலையிடும். என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மணிப்பூர் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story