ராணுவ ரகசியங்களை வெளியிட்ட வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி
ராணுவ ரகசியங்களை வெளியிட்ட வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் (வயது 24). இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் உண்டானது. பின்னர் 2 பேரும் தங்களது எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். அப்போது இந்திய ராணுவம், கடற்படை, விமான படை பற்றிய தகவல்களை அந்த பெண்ணிடம், ஜிதேந்தர் சிங் கூறியதாக தெரிகிறது. இதனால் அவரை போலீசார் கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் கைது செய்து இருந்தனர். தற்போது அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஜிதேந்தர் சிங் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. அப்போது நீதிபதி நடராஜன் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளியே சென்று சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனுதாரரின் நலன், தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.