அன்னிய மரங்களை விற்பனை செய்ய தடை - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


அன்னிய மரங்களை விற்பனை செய்ய தடை - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
x

அன்னிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு வனப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் அன்னிய மரங்களை அப்புறப்படுத்தக்கோரிய வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''வனப்பகுதிகளில் அப்புறப்படுத்தப்படும் மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம், இலவசமாக எடுத்துக்கொள்ள முன்வந்துள்ளது. இதுசம்பந்தமாக 2 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். வனப்பகுதிகளில் 506 ஹெக்டேர் பரப்பில் இருந்த அன்னிய மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 200 ஹெக்டேரில் உள்ள மரங்கள் விரைவில் அப்புறப்படுத்தப்படும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அன்னிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும். வழக்கு விசாரணையை செப்டம்பர் 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.


Next Story