சிவமொக்காவில் பஞ்சாரா சமூகத்தினர் மீண்டும் போராட்டம்


சிவமொக்காவில் பஞ்சாரா சமூகத்தினர் மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 5:00 AM GMT (Updated: 29 March 2023 5:03 AM GMT)

உள் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சிவமொக்காவில பஞ்சாரா சமூகத்தினர் மீண்டும் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சாலை நடுவே டயர்களுக்கு தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவமொக்கா-

உள் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சிவமொக்காவில பஞ்சாரா சமூகத்தினர் மீண்டும் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சாலை நடுவே டயர்களுக்கு தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு

கர்நாடகத்தில் தலித் சமூகத்தில் உள்ள சிறிய சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கவும், சதாசிவா கமிட்டி வழங்கிய அறிக்கையை அமல்படுத்தவும் அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் உள் இடஒதுக்கீடு வழங்க பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், உள் இடஒதுக்கீடு வழங்கவும், சதாசிவா அறிக்கையை அமல்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் பஞ்சாரா சமூகத்தினர் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. அப்போது சிகாரிப்புராவில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பாவின் வீடு மீது அவர்கள் கல்வீசி தாக்கினர். மேலும் சாலையில் டயர்களை கொளுத்தி போட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். போலீசார் மீதும் பஞ்சாரா சமூகத்தினர் கல்வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

மீண்டும் போராட்டம்

இதனால் சிகாரிப்புராவில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சிகாரிப்புராவில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று சிவமொக்கா தாலுகா குன்சேனஹள்ளி பகுதியில் பஞ்சாரா சமூகத்தினர் மீண்டும் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் உள் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும், சதாசிவா அறிக்கையை அமல்படுத்தக்கூடாது எனவும் கோஷம் எழுப்பினர்.

சாலை நடுவே...

பின்னர் அவர்கள், சிவமொக்கா-சிகாரிப்புரா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த சாலையில் டயர்கள் உள்ளிட்ட பொருட்களை போட்டு தீவைத்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கும்சி போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார், தீயை அணைத்து அங்கு போக்குவரத்தை சீர் செய்தனர். உள்இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சிவமொக்காவில் பஞ்சாரா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், ஆளும் பா.ஜனதா கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Next Story