வங்கி லாக்கர் நாளை ஆய்வு: சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் - மணீஷ் சிசோடியா டுவீட்


வங்கி லாக்கர் நாளை ஆய்வு: சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் - மணீஷ் சிசோடியா டுவீட்
x

மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை நாளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். அங்கு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

குறிப்பாக, மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19-ந் தேதி அதிரடி சோதனை நடத்தியது.

இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை நாளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாளை சிபிஐ எங்கள் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய வருகிறது. ஆகஸ்ட் 19-ம் தேதி எனது வீட்டில் 14 மணி நேரம் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. லாக்கரிலும் எதுவும் கிடைக்காது. சிபிஐ-ஐ வரவேற்கிறோம். விசாரணைக்கு நானும் எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story