நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் 19-ந் தேதி வேலை நிறுத்தம்


நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் 19-ந் தேதி வேலை நிறுத்தம்
x

Image Source: PTI

நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வரும் 19 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:-

வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பர். ஆனால், சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்கிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயலாகும்.

சில வங்கிகள் பல்வேறு பணிகளுக்கு அயல்பணி நடவடிக்கை, பொதுமக்களிடம் வைப்புத்தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததுடன் அவர்களுக்கான எவ்வித இழப்பீட்டையும் வழங்கவில்லை.இதற்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர், 10-ந் தேதி டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று இன்று (நேற்று) வங்கிககள் கூட்டமைப்புடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் 19-ந் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story