சென்னை-மைசூரு வந்தேபாரத் ரெயில் சேவை கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


சென்னை-மைசூரு வந்தேபாரத் ரெயில் சேவை கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

சென்னை-மைசூரு இடையே தொடங்கும் வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவை, கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

சென்னை-மைசூரு இடையே தொடங்கும் வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவை, கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

கவுரவப்படுத்துகிறார்

பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) பெங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் 108 அடி உயர கெம்பேகவுடா வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக அங்கு பிரமாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்த கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த விழா நடைபெறும் இடத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கெம்பேகவுடா சிலையை செதுக்கியுள்ள சிற்பி ராம் சுதாரா மிகவும் பிரபலமானவர். திறமையானவரும் கூட. சர்தார் வல்லபாய் படேல் சிலை, அம்பேத்கரின் உயரமான சிலையை உருவாக்கியவரும் அவரே. அவரை பிரதமர் மோடி நாளை(இன்று) கவுரப்படுத்துகிறார். கர்நாடக மக்கள் சார்பில் அவரை பாராட்டுகிறேன். பிரதமர் மோடி நாளை(இன்று) காலை 9 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார்.

வந்தேபாரத் ரெயில்

அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் பவனுக்கு வரும் அவர் அங்கு கனகதாசர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரதமர், ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கே வழிகாட்டியாக திகழ்ந்த கனகதாசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன்பிறகு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் வந்தபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதனால் சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் குறையும்.

இது கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். அதன்பிறகு சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்கு 2-வது முனையத்தையும், கெம்பேகவுடா சிலையையும் திறந்து வைக்கிறார். இந்த முனையம் மூலம் நாட்டின் 2-வது பெரிய விமான நிலையமாக இது உருவெடுக்கும். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். பெங்களூருவில் 3 நாட்களில் அனைத்து சாலை பள்ளங்களும் மூடப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த ஆய்வின்போது கர்நாடக மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மந்திரிகள் அஸ்வத் நாராயண், ஆர்.அசோக், சி.சி.பட்டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story