மராட்டிய மந்திரிகள் மீது சட்ட நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை


மராட்டிய மந்திரிகள் மீது சட்ட நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
x

பெலகாவிக்கு மராட்டிய மாநில மந்திரிகள் அத்துமீறி வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரித்துள்ளார்.

பெங்களூரு:

பெலகாவிக்கு மராட்டிய மாநில மந்திரிகள் அத்துமீறி வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரித்துள்ளார்.

பெலகாவி எல்லை பிரச்சினை

கர்நாடகத்திற்கும், மராட்டியத்திற்கும் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெலகாவியில் ஒரு அங்குல இடத்தை கூட மராட்டிய அரசுக்கு விட்டு கொடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஆனாலும் எல்லை பிரச்சினையை மராட்டிய அரசு கையில் எடுத்து, பெலகாவியை சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக பெலகாவி மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லை பிரச்சினை தொடர்பாக மராட்டிய அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இன்று மந்திரிகள் வருகை

இதற்கிடையில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 2 மந்திரிகள் எல்லை பிரச்சினை குறித்து மராட்டிய ஏகிகிரண் சமிதி (எம்.இ.எஸ்.) கட்சியின் தலைவர்களுடன் பேசுவதற்காக பெலகாவிக்கு வருவதாக தெரிவித்து இருந்தனர். அந்த மாநிலத்தை சேர்ந்த மந்திரிகளான சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகிய 2 பேரும் வருகிற 6-ந் தேதி (அதாவது இன்று) பெலகாவிக்கு வருவதாக கடிதம் எழுதி கர்நாடக தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

எல்லை பிரச்சினை விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநில மந்திரிகள் பெலகாவிக்கு வருவதுடன், எம்.இ.எஸ். கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் மராட்டிய மந்திரிகள், பெலகாவிக்கு வருவதற்கு அனுமதிக்க கூடாது என்று மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடம், பசவராஜ் பொம்மை வலியுறுத்தி இருந்தார்.

கன்னட அமைப்புகள் கண்டனம்

ஆனால் பெலகாவி எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க திட்டமிட்டபடி இன்று (செவ்வாய்க்கிழமை) பெலகாவிக்கு வருவோம் என்று மராட்டிய மந்திரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பெலகாவி மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் மராட்டிய மந்திரிகள், பெலகாவிக்கு வருவதற்கு கன்னட அமைப்புகள் கடும் கண்டனமும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெலகாவிக்கு வர வேண்டாம்

கர்நாடகத்தை பொறுத்தவரை பெலகாவி எல்லை பிரச்சினை முடிந்து போன விவகாரம் ஆகும். எல்லை பிரச்சினை விவகாரம் தொடர்பாக மராட்டிய மாநில மந்திரிகள், தற்சமயம் பெலகாவிக்கு வர வேண்டாம். மராட்டிய மந்திரிகள், பெலகாவிக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று மராட்டிய அரசுக்கு தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் திட்டமிட்டபடி பெலகாவிக்கு வருவோம் என்று மராட்டிய மந்திரிகள் கூறி இருப்பது சரியானது இல்லை. கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநில மக்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். அதே நேரத்தில் எல்லை பிரச்சினையும் இருந்து வருகிறது. எல்லை பிரச்சினையை அடிக்கடி கையில் எடுத்து பேசி வருவது சரியானது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக மராட்டிய அரசே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

முதல்-மந்திரியுடன் பேச்சு

இந்த சந்தர்ப்பத்தில் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வருவது, மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகும். மக்களிடையே வன்முறையை தூண்டிவிடும் நடவடிக்கை ஆகும். மராட்டிய மந்திரிகளை பெலகாவிக்கு அனுப்ப வேண்டாம் என்று அந்த மாநில முதல்-மந்திரியிடம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. மீண்டும் ஒரு முறை மராட்டிய மாநில முதல்-மந்திரியிடம் இதுபற்றி பேசப்படும்.

அதையும் மீறி மராட்டிய மாநில மந்திரிகள் பெலகாவிக்கு வந்தால், அவர்கள் எல்லை பகுதியில் வைத்தே திருப்பி அனுப்பப்படுவார்கள். பெலகாவிக்கு மராட்டிய மந்திரிகளை அனுமதிக்க வேண்டாம் என்று பெலகாவி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் கர்நாடக அரசு தயங்காது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், இதற்கு முன்பு எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்தீர்களோ, தற்போது அந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முஸ்லிம், இந்து மாணவிகளுக்காக தனியாக கல்லூரிகள் திறக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம், குறிக்கோளாகும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story