பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்


பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்
x

கர்நாடகம்-மராட்டியம் எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு சட்டநிபுணர்களுடன் இதுபற்றி அவர் ஆலோசனை நடத்து கிறார்.

பெங்களூரு-

கர்நாடகம்-பெலகாவி இடையே மீண்டும் எல்லை பிரச்சினை எழுந்துள்ளது.

எல்லை பிரச்சினை

பெலகாவி மற்றும் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் 682 கிராமங்களை மராட்டிய மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்று அம்மாநிலம் வலியுறுத்தி வருகிறது. இரு மாநிலங்கள் இடையே உள்ள எல்லை பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, எல்லை பிரச்சினை குறித்த வழக்கை கவனிக்க 2 மந்திரிகளை நியமித்துள்ளார். மேலும் பெலகாவியில் வசிக்கும் மராட்டிய மக்களுக்கு சுகாதார காப்பீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பெலகாவியில் ஒருங்கிணைந்த கர்நாடகத்திற்காக போராடிய தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறினார். மேலும், கன்னடர்கள் அதிகம் வசிக்கும் சோலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வழக்கு விசாரணை

அதற்கு பதிலடி கொடுத்த மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பெலகாவி, கார்வார் மற்றும் 682 கிராமங்களை மராட்டியத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்தார். இரு மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை அதிகரித்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் கர்நாடக பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை கண்டித்து அம்மாநிலத்தை சேர்ந்த சில மராட்டிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனால் இரு மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை முற்றி பதற்றம் நிலவியுள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

டெல்லி செல்கிறேன்

இந்த வழக்கில் ஆஜராகும் கர்நாடக தரப்பு மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியை நேரில் சந்தித்து ஆலோசிப்பதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறார். இதுகுறித்து பசவராஜ்பொம்மை நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 30-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதுகுறித்து மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி மற்றும் சட்ட நிபுணர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க நான் நாளை(அதாவது இன்று) டெல்லி செல்கிறேன். கர்நாடக எல்லை மற்றும் ஆறுகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சிவராஜ் பட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் நான் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளேன். மராட்டிய மாநிலத்துடன் சட்ட போராட்டத்திற்கு நாங்கள் தயாராகியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து கூறுவோம்.

நெருக்கடி நிலை

நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது, அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தியது எந்த கட்சி என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பா.ஜனதா எப்போதும் உரிய மதிப்பு அளித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியினர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மரியாதை கொடுப்பதை கற்க வேண்டும். டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். அவர் இன்னும் நேரம் ஒதுக்கவில்லை. நேரம் ஒதுக்கினால் அவரை சந்தித்து பேசுவேன். மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ்கோயலையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன்.

உண்மைகள் தெரியவரும்

மண்டியா, மைசூரு, கங்காவதி, மங்களூரு, சிந்தனூர் உள்ளிட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். பல்வேறு

சமூகங்கள் இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கேட்கின்றன. ஆனால் அரசு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு முடிவு எடுக்கும். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிவடைந்த பிறகே இதில் அடங்கியுள்ள உண்மைகள் என்ன என்று தெரியவரும்.

கர்நாடகத்தின் நிலம், நீர், மொழி குறித்து பிரச்சினை வரும்போது, எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. ஆனால் அரசியல் என்று வரும்போது, அனைத்துக்கட்சிகளும் அரசியல் செய்கின்றன. மைசூரு விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மைசூருவில் மோசமான நிலையில் உள்ள பாரம்பரிய பண்பாட்டு கட்டிடங்களை சீரமைக்க உரிய நிதி உதவி வழங்கப்படும்.

பொது சிவில் சட்டம்

நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பா.ஜனதா கூறி வருகிறது. இதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கா்நாடகத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பிற மாநிலங்களிடம் இருந்து தகவல்களை கேட்டு பெறுவோம். அதன் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story