பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை


பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை
x

அமித்ஷா, ஜே.பி.நட்டாவின் அழைப்பின் பேரில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை இன்று டெலலி புறப்பட்டு செல்கிறார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு:

ஈசுவரப்பா அதிருப்தி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. மந்திரிசபையில் 6 இடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை நிரப்ப வேணடும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் உள்ளது.

அதே நேரத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 அல்லது 5 மாதங்களே இருப்பதால், மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த எம்.எல்.ஏ.க்கள், 4 மாதத்திற்கு மந்திரியாக இருக்க விரும்பாமல் இருந்து வருகின்றனர். ஆனால் மந்திரி பதவியில் இருந்து விலகிய ஈசுவரப்பா, ரமேஷ் ஜார்கிகோளி மட்டும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மந்திரி பதவி கிடைக்காததால் பா.ஜனதாவில் இருந்து ஈசுவரப்பா விலக இருப்பதாகவும் கூறப்பட்டது.

முதல்-மந்திரி டெல்லி பயணம்

பின்னர் ஈசுவரப்பாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சமாதானப்படுத்தியதால், அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்திருந்தார். அதுபோல், ரமேஷ் ஜார்கிகோளியையும் கட்சி தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பின் பேரில் அவர் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

குஜராத், இமாசல பிரதேச மாநிலங்களில் தேர்தல் முடிந்திருப்பதால், கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஆலோசிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷா சந்தித்து பேசி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார்.

மந்திரிசபை விரிவாக்கம்

குறிப்பாக மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பு குறித்து ஜே.பி.நட்டா, அமித்ஷாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அதிருப்தியில் இருக்கும் ஈசுவரப்பா மற்றும் ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து அவர் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர மூத்த மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும், பா.ஜனதா மேலிடம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இன்று டெல்லி செல்லும் போதும் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு கட்சி அனுமதி அளிக்குமா? என்பது தெரியவில்லை. மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கினால் சங்கராந்தி பண்டிகையின் போது விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

========


Next Story