கர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்கள் குறித்து 17 மாவட்ட கலெக்டர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை


கர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்கள் குறித்து 17 மாவட்ட கலெக்டர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை
x

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 17 மாவட்ட கலெக்டர்களுடன் மழை வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிக்காக மேலும் 2 மாநில பேரிடர் மீட்பு குழுக்களை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

மீட்பு குழுக்கள்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தனது ஆர்.டி.நகர் வீட்டில் இருந்தபடி 17 மாவட்ட கலெக்டர்களுடன் மழை வெள்ள சேதங்கள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, குடகு, சிவமொக்கா, ஹாசன், மண்டியா, மைசூரு, தாவணகெரே, துமகூரு, ராமநகர், யாதகிரி, கொப்பல், ஹாவேரி, பீதர், கலபுரகி, கதக், சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களை சில மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கலெக்டர்கள் அந்த குழுவினரை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நிலச்சரிவு

திடீரென வெள்ளம் ஏற்படும் பகுதியில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அணைகளில் இருந்து நீர் திறப்பதற்கு முன்பு அதன் படுகையில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். ஏரிகள் உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். நிலச்சரிவு ஏற்படும் குடகு, தட்சிண கன்னடா, உத்தரகன்னடா மாவட்டங்களில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும்.

நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளில் விழும் மண்ணை அகற்றுவதற்கான குழுக்களை 24 மணி நேரமும் தயாராக வைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும். உலர்ந்த உணவு தானியங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் மீட்பு பணிகளை துரிதகதியில் மேற்கொள்ள புதிதாக 2 மாநில பேரிடர் மீட்பு குழுக்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரிகள் கோட்டா சீனிவாசபூஜாரி, அஸ்வத் நாராயண், நாராயணகவுடா, கோபாலய்யா, பசவராஜ், அரக ஞானேந்திரா, தலைமை செயலாளர் வந்திதா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மழை சேத விவரங்கள்

கர்நாடகத்தில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். 507 கால்நடைகள் இறந்துள்ளன. 3 ஆயிரத்து 559 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்து விட்டன. 17 ஆயிரத்து 212 வீடுகள் பாதி சேதம் அடைந்துள்ளன. 1 லட்சத்து 29 ஆயிரத்து 87 எக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. தோட்டக்கலை பயிர் 7 ஆயிரத்து 942 எக்டேர் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட சாலைகள் 3 ஆயிரத்து 162 கிலோ மீட்டரும், கிராம சாலைகள் 8 ஆயிரத்து 445 கிலோ மீட்டரும், 1,068 பாலங்களும், 4 ஆயிரத்து 531 பள்ளி கட்டிடங்களும், 222 அங்கன்வாடி கட்டிடங்களும், 16 ஆயிரத்து 760 மின் கம்பங்களும், 1,469 டிரான்ஸ்பார்மர்களும், 409 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் வயர்களும் 93 சிறிய ஏரிகளும் சேதம் அடைந்துள்ளன. கர்நாடகத்தில் உள்ள அனைத்து கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.857 கோடி கையிருப்பு உள்ளன. இந்த தகவலை அரசு வெளியிட்டுள்ளது.


Next Story