வரலாறு காணாத தொடர் கனமழை எதிரொலி: வெள்ளத்தில் 3-வது நாளாக முடங்கிய பெங்களூரு
பெங்களூருவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் 3-வது நாளாக மழை வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. சாலைகள் ஆறாக மாறியதால் படகு, டிராக்டர்களில் மக்கள் பயணம் செய்கிறார்கள்.
பெங்களூரு: பெங்களூருவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் 3-வது நாளாக மழை வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. சாலைகள் ஆறாக மாறியதால் படகு, டிராக்டர்களில் மக்கள் பயணம் செய்கிறார்கள்.
தலைநகர் பெங்களூரு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தலைநகா் பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஒரு சில பகுதிகளில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த வீடுகளில் வசித்து வருபவர்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக பெங்களூருவின் புறநகர் பகுதிகளான சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், எமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஏரி தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதற்கு ஏரிகளை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
தேங்கி நிற்கும் மழைவெள்ளம்
ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள ரெயின்போ லே-அவுட், சன்னிபுரூக்ஸ் லே-அவுட் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த லே-அவுட்டுகளில் உள்ள வில்லா என்று அழைக்கப்படும் சொகுசு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளன.
அந்த வீடுகளில் வசித்து வந்தவர்களை மீட்பு படையினர் ரப்பர் படகுகள், டிராக்டர்கள், பரிசல்கள் மூலம் மீட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள், டோயிங் வாகனங்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும் ரெயின்போ லே-அவுட் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மையம், கடைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளம் வடியவில்லை
கடந்த 2 நாட்களாக பெங்களூருவை கனமழை புரட்டிப்போட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. 3-வது நாளாக கனமழை பெய்ததால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 3 நாட்களாக மழை பெய்ததால் பெங்களூருவில் ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள், டிராக்டர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சர்ஜாப்புரா ரோட்டில் சாலையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடி வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி தவறி விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
50 கார்கள் மூழ்கின
ரெயின்போ லே-அவுட் அருகே உள்ள ஒரு கிரானைட் கற்கள் விற்பனை கடையில் வெள்ளம் புகுந்ததால் அந்த கடை முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதுபோல பஸ் நிறுத்தமும் தண்ணீரில் மிதக்கிறது. சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று விப்ரோ நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 50 கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதுபோல சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள கன்ட்ரிசைட் என்ற அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியும் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளன. சர்ஜாப்புரா ரோட்டில் தேங்கி இருந்த மழைநீரில் ஒரு சொகுசு கார் சிக்கி கொண்டது. இதனால் அந்த காரில் வந்தவர்கள் காரை சாலையில் விட்டுவிட்டு சென்று விட்டனர்.
மீட்பு பணி
இதுபோல ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள ஷிலவந்தகெரே, வர்த்தூர் ஆகிய ஏரிகள் உடைந்தன. இதனால் ஏரிகளில் இருந்து வெள்ளமென சீறிப்பாய்ந்த தண்ணீர் டி-சைட் அடுக்குமாடி குடியிப்பை சூழ்ந்தது. இதனால் தரைமட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுபற்றி அறிந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று அந்த குடியிருப்பில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். பரிசல்கள், பொக்லைன் எந்திரங்களும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்கள் மூலமும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் மீட்கப்பட்டனர். சில இடங்களில் டிராக்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.
இதுதவிர காடுகோடி பகுதியில் உள்ள ஏரி உடைந்து போனதால் அங்குள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பரிதவித்து வருகிறார்கள். குறிப்பாக வாகன நிறுத்தும் இடங்கள் தண்ணீரில் மூழ்கின.
தீவு போல் காட்சி அளிக்கும் குடியிருப்புகள்
இதனால் வாகனங்கள் சேதம் அடைந்தன. ஏரிகள் உடைப்பு காரணமாக பெல்லந்தூர், காடுகோடி, சர்ஜாப்புரா ரோடு, ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இதனால் அந்த குடியிருப்புகள் தீவு போல் காட்சி அளிக்கிறது. அந்த குடியிருப்புகளில் உள்ள சுமார் 4 ஆயிரம் வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோல உரமாவு பகுதியில் சாய் லே-அவுட்டில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பெங்களூரு-சென்னை சாலையில் உள்ள ஏராளமான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் 2 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது.
இதனால் சுரங்கப்பாதைகளை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளம் வடியாததற்கு கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக கூறப்படுவதால் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இருப்பினும் வெள்ளம் வடியாத நிலையில் சாலைகள் ஆறுகள் போல் காட்சி அளித்து வருவதால், இருசக்கர வாகனங்கள், கார்களில் சாலைகளை கடக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஐ.டி. நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் வேலைக்கு செல்லவும், மாணவ-மாணவிகள் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லவும் டிராக்டர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பயணித்து செல்கிறார்கள். தொடர் மழை-வெள்ளத்தால் பல ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. சில ஐ.டி. நிறுவனங்கள் 3-வது நாளாக விடுமுறை அறிவித்துள்ளது.
வரலாறு காணாத மழை
பெங்களூருவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கோரதாண்டவமாடி வருகிறது. சுமார் 90 ஆண்டு கால வரலாற்றில் இப்படி மழை பெய்யவில்லை என முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையே கூறியுள்ளார். இதனால் பெங்களூருவில் மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் பெங்களூரு நகரம் மற்றும் புறநகர் பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி போய் உள்ளது.
டிராக்டர் பயணத்திற்கு ரூ.50 கட்டணம்
பெங்களூரு சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள ரெயின்போ லே-அவுட்டை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த லே-அவுட்டில் உள்ள வீடுகளில் சிக்கி உள்ளவர்கள் டிராக்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சில டிராக்டர் டிரைவர்கள் லே-அவுட்டில் சிக்கி உள்ள மக்களை டிராக்டரில் வெளியே அழைத்து வர ஒரு நபருக்கு தலா ரூ.50 கட்டணம் வசூலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பெண் கூறும்போது, எனது நிறுவனத்தில் இருந்து எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனது கார் மழைநீரில் சிக்கி சேதம் அடைந்ததால் பயன்படுத்த முடியவில்லை. இதனால் எனது வீட்டில் இருந்து சாலைக்கு வர டிராக்டருக்கு ரூ.50 கட்டணம் கொடுத்து வருகிறேன் என்றார்.
மரம் விழுந்து 4 கார்கள் சேதம்
பெங்களூரு மத்திகெரே பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார்கள் சேதம் அடைந்தன. இதுபோல யஷ்வந்தபுரம் பகுதியிலும் மரம் முறிந்து விழுந்ததில் ஒரு கார் சேதம் அடைந்தது.
100 அடி சாலையில் 6 அடிக்கு மேல் தண்ணீர்
பெங்களூரு இந்திராநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை சீர்செய்வது போலீசாருக்கு கடும் சவாலாக அமைந்தது. மேலும் இந்திராநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
51 சதவீதம் கூடுதல் மழை
பெங்களூருவில் பெய்த மழை குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் 144 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இம்மாதத்தின் முதல் 5 நாட்களில் 51 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. பொம்மனஹள்ளி, மகாதேவபுராவில் மட்டும் 307 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த 42 ஆண்டுகளில் பெய்த அதிக மழை ஆகும். கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெங்களூருவில் உள்ள 164 ஏரிகளும் நிரம்பியுள்ளன. அவற்றின் உபரி நீர் மற்றும் மழைநீர் சேர்ந்து வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் 17 மாவட்டங்களில் 5 ஆயிரத்து 92 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரம் ஏக்கரில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 430 வீடுகள் மோசமாகவும், 2 ஆயிரத்து 188 வீடுகள் பாதி அளவுக்கும் சேதம் அடைந்துள்ளன. 255 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.