5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார தலைநகரமாக பெங்களூரு மாறும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார தலைநகரமாக பெங்களூரு மாறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார தலைநகரமாக பெங்களூரு மாறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
தொழில்நுட்ப மாநாடு
பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை கடந்த 16-ந் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் மாநாடு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதிலும், புத்தொழில் நிறுவனங்களை கவருவதிலும் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூருவை தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளில் தொழில் தொடங்க வேண்டும். அவ்வாறு செய்தால் பெங்களூருவை போல் பிற மாவட்டங்களும் வளர்ச்சி அடையும். விவசாயம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று எல்லா துறைகளிலும் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.
பயணிக்க வேண்டும்
கர்நாடகத்தில் அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை மனித சமூகத்தின் நன்மைக்காக, நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தோல்வியை கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
தொழில்முனைவோர் தங்களின் துறைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த மாநாட்டின் நோக்கம் வெற்றி பெறும். பல்வேறு ஆராய்ச்சிகள் தனி நபர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில்நுட்ப மாநாட்டை அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டு வெற்றிகரமானதாக ஆக்கியுள்ளோம். தொழில்நுட்பத்துடன் சிந்தனைகள் சேர்ந்துள்ளன. பெங்களூரு என்றால் தங்கமான நகரம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பெங்களூரு நாட்டின் பொருளாதாரத்தின் தலைநகரமாக மாறும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இந்த விழாவில் மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ்கோயல், அறிவியல், தகவல், உயிரி தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.