பாஜகவை கடுமையாக சாடிய பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்
பாரதிய ஜனதா, சமூகத்தில் பிரச்சனைகளை மட்டுமே ஏற்படுத்துவதாக பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் குற்றம் சாட்டினார்.
பாட்னா,
பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.பீகாரில் பாரதிய ஜனதா ஆதரவுடன் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த பாரதிய ஜனதாவுடன் உறவை முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் உள்ளிட்ட மஹா கட்பந்தன் கூட்டணி ஆதரவுடன் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பொறுப்பேற்றார்.
பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அதன் மீது, முதல் மந்திரி நிதிஷ்குமார் பேசினார். அப்போது அவர், 2024 மக்களவைத் தேர்தலிலும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பாரதிய ஜனதா, சமூகத்தில் பிரச்சனைகளை மட்டுமே ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டிய நிதிஷ்குமார், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் போது பாரதிய ஜனதா எங்கிருந்தது என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பாஜக மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.குரல் வாக்கெடுப்பில் 160 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.