பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் சொத்து மதிப்பு ரூ.75½ லட்சம் ஓராண்டில் ரூ.18 ஆயிரம் அதிகரிப்பு
நிதிஷ்குமார் கையில் ரூ.28 ஆயிரத்து 135 ரொக்கமும், வங்கிகளில் ரூ.51 ஆயிரத்து 856-ம் உள்ளது.
பாட்னா
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், தனது மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி, அவர் உள்பட அனைத்து மந்திரிகளின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் பீகார் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
நிதிஷ்குமார் கையில் ரூ.28 ஆயிரத்து 135 ரொக்கமும், வங்கிகளில் ரூ.51 ஆயிரத்து 856-ம் உள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.16 லட்சத்து 68 ஆயிரம். அசையா சொத்துகள் மதிப்பு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம். மொத்த சொத்து மதிப்பு ரூ.75 லட்சத்து 53 ஆயிரம். ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் அதிகரித்துள்ளது. டெல்லியில் துவாரகா பகுதியில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் அவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது.
லாலுபிரசாத் யாதவின் மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவிடம் ரூ.75 ஆயிரம் ரொக்கமும், அவருடைய மனைவி ராஜஸ்ரீயிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் உள்ளது. லாலுவின் மற்றொரு மகனும், சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான தேஜ்பிரதாப் யாதவிடம் ரூ.3 கோடியே 20 லட்சம் சொத்து உள்ளது. மந்திரிகளில் பெரும்பாலானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக உள்ளனர்.